About

அறிஞர் நா. வானமாமலை

நாட்டார் வழக்காற்றியலின் முன்னோடி

nv

தோற்றம் : 07-12-1917  ::  மறைவு : 02-02-1980

சாதாரண மக்களின் பண்பாட்டைப் பதிவுசெய்யும் நாட்டார் இயலை ஒரு கல்விசார் படிப்பாக மாற்றியதில் நா. வானமாமலையின் பங்கு முக்கியமானது. தமிழ் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளரான இவர் 1917-ம் ஆண்டு டிசம்பர் 7 அன்று நெல்லை மாவட்டம் நாங்குனேரியில் பிறந்தவர். நாட்டார் பாடல்களையும் கதைகளையும் தேடிச் சேகரித்துப் பதிப்பித்தார். தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள், ஐவர் ராசாக்கள் கதை, கட்டபொம்மு கூத்து, கட்ட பொம்மன் கதைப்பாடல், காத்தவராயன் கதைப்பாடல், கான்சாகிபு சண்டை, முத்துப்பட்டன் கதை, வீணாதிவீணன் கதை போன்றவை அவற்றுள் முக்கியமானவை. இந்தப் புத்தகங்கள் மூலம் பதிவுசெய்யப்படாத வெகு மக்கள் பண்பாட்டை நா.வா. பிரதி நிதித்துவப்படுத்தினார்.

மானுடவியல், தொல்லியல், கல்வெட்டியல் ஆகியவற்றின் அடிப்படை யில் எழுதப்பட்ட பண்பாட்டு வரலாற்றுக்கு மாற்றாக இந்தப் பின்னணியில் நாட்டார் வழக்காற்றியலையும் இணைத்துத் தமிழ்நாட்டின் சமூகப் பண்பாட்டு வரலாற்றை உருவாக்க முதல் விதையைத் தூவியவர் நா.வா.தான். இது மட்டும் அல்லாமல் இன்றைக்குள்ள தமிழின் முக்கியமான ஆய்வாளர்கள் பலருக்கும் அவர் வழிகாட்டியாக விளங்கினார். ஆ.சிவசுப்பிரமணியன், அ.கா.பெருமாள் போன்ற அறிஞர்கள் பலருக்கும் ஊக்கமளித்துவந்தார்.

மேலும் கல்வித் துறை சார்ந்தவர்கள் மட்டுமே ஆய்வு மேற்கொள்ள முடியுமென்ற எண்ணத்தை மாற்றியமைக்கும் விதமாக ‘நெல்லை ஆய்வுக் குழு’ என்ற அமைப்பை 1967-ல் தொடங்கி நடத்தினார். தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.போத்தையா வாத்தியார் போன்றவர்கள் நாட்டார் பாடல்களைத் தொகுப்பதற்கு நா.வா. உற்சாகம் வழங்கியுள்ளார். இம்மாதிரியான நாட்டார் ஆய்வுகளுக்காக 1969-ல் ‘ஆராய்ச்சி’ என்ற சிற்றிதழையும் தொடங்கினார். இதில் ஆராய்ச்சி தொடர்பான கட்டுரைகளை வெளியிட்டு நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளைக் கவனப்படுத்தினார்.

இளம் வயதிலேயே தமிழ் இலக்கியங் களையும், மேலை இலக்கியங்களையும் வாசித்த அனுபவம் கொண்டவரான நா.வா., இயல்பிலேயே மனித நேய உணர்வைப் பெற்றிருந்தார். அதனால் கம்யூனிசச் சிந்தனைகள் அவருள் தாக்கத்தை ஏற்படுத்தியது. வேதியியலில் இளங்கலையும் தமிழில் முதுகலையும் முடித்துத் தமிழாசிரியராகப் பணியாற்றிவந்த அவர், தன் இயக்கச் செயல்பாடுகளுக்காக அப்பணியைத் துறந்தார்.

அவரது சொந்த ஊரான நாங்குனேரி வட்டார விவசாயிகள் இயக்கத்திலும், நெல்லை மாவட்டத் தொழிலாளர் இயக்கத்திலும் நேரடியாகச் செயலாற்றி வந்தார். 1948, 1970 இருமுறை தன் இயக்கச் செயல்பாடுகளுக்காகச் சிறை வாசத்தை அனுபவத்திருக்கிறார். 1950-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது தொடுக்கப்பட்ட அடக்குமுறைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடி மீளவிட்டானில் சரக்கு ரயில் கவிழ்க்கப்பட்டது. இந்தச் சம்பவம், ‘நெல்லைச் சதி வழக்கு’ என அழைக்கப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாலதண்டாயுதம் போன்றவர்கள் இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டனர். இந்தச் சதிச் சம்பவத்தில் நா.வா. விசாரணைக்காகக் கைதுசெய்யப்பட்டார். நில மீட்சிப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஒரு மாதத்துக்கு மேல் சிறைத் தண்டனையில் இருந்த நா.வா. திவான் ஜர்மன்தாஸின் ‘மகாராஜ்’ என்ற இந்திய சமஸ்தான மன்னர்களைப் பற்றிய நூலை மொழிபெயர்த்தார்.

நா.வா.வின் பங்களிப்புக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழம் ‘இலக்கிய கலாநிதி’ பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது. 1980-ம் ஆண்டு பிப்ரவரியில் இயற்கை எய்திய நா. வானமாமலை இன்றைக்கும் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுத் துறையில் ஒரு சிந்தனைப் பள்ளியாக இருக்கிறார்

நன்றி: தமிழ் தி ஹிந்து